இந்தியாவில் மொழிப்பெயர்ப்பு என்பது இடையீடுகள் மிக்க வரலாற்றைக் கொண்டது. மிகப் பழமையான மொழிபெயர்ப்புகள் சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி முதலிய மொழிகளுக்கும் வட்டார மொழிகளுக்கு இடையேயும் மற்றும் அதே மொழிகளுக்கும் அரபு, பாரசீகம் ஆகிய மொழிகளுக்கு இடையேயும் நிகழ்ந்துள்ளன. எட்டாம் நூற்றாண்டிற்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கும் இடையே பஞ்சதந்திரம், அஷ்டாங்கஹ்ருதய, அர்த்தசாஸ்திரம், ஹித்தோபதேசம், யோகசூத்திரம், இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை முதலிய வருணணை மற்றும் அறிவு நூல்கள் போன்றவை அராபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. மேலும், பாரசீகம், இந்திய மொழிகள் ஆகியவற்றிற்கு இடையே அதிக அளவில் பரிமாற்றமும் நிகழ்ந்தன. பக்தி காலத்தில் சமஸ்கிருத நூல்கள், குறிப்பாக பகவத் கீதை மற்றும் உபநிடதங்கள் போன்றவை பிற இந்திய மொழிகளில் அறியப்பட்டதின் விளைவாக, மராத்திய கவிஞரான ஞானேஸ்வரரால் மொழிபெயர்க்கப்பட்ட கீதையின் மராத்திய தழுவலான ஞானேஸ்வரி போன்ற புகழ்பெற்ற நூல்கள் படைக்கப்பட்டன. மேலும், இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்கள் பல்வேறு மொழிகளில் துறவிக் கவிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டன. சான்றாக, இராமாயணத்தைத் தழுவி இயற்றப்பட்ட பம்பா, கம்பர், மொல்லா, எழுத்தச்சன், துளசிதாசர், பிரேமானந்தர், ஏகநாதர், பலராமதாசர், மாதவ் கண்டலி (அ.து) கிருத்திபாசு போன்றவர்களின் படைப்புகளைக் கூறலாம்.
காலனி ஆட்சிக்காலத்தில் ஐரோப்பிய மற்றும் இந்திய மொழிகளுக்கிடையே, குறிப்பாக ஐரோப்பிய மொழிகள் மற்றும் சமஸ்கிருதத்திற்கும் இடையே பெருமளவில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டன. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன், ஸ்பானிஷ் போன்ற ஐரோப்பிய மொழிகளுக்கும் இந்திய மொழிகளுக்குமிடையே பரிமாற்றங்கள் நடைபெற்ற போதிலும் அப்போதைய ஆட்சியாளர்களின் மொழியாக ஆங்கிலம் விளங்கியதால், இத்தகைய மொழிபெயர்ப்புகள் அதிக அளவில் ஆங்கில மொழியில்தான் செய்யப்பட்டன. வில்லியம் ஜோன்ஸ் என்பவர் காளிதாசரின் அபிஞானசாகுந்தலம் என்ற சமஸ்கிருத நூலை மொழிபெயர்த்தது ஆங்கில மொழிபெயர்ப்பு முயற்சிகளின் உச்சநிலையாகக் கொள்ளலாம். இந்தியாவின் பண்பாட்டுப் பெருமையைக் காட்டும் அடையாளமாகவும் இந்திய உணர்வில் தோன்றிய முதன்மை நூல்களுள் ஒன்றாகவும் தற்போது சாகுந்தலம் போற்றப்பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் சாகுந்தலம் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதிலிருந்து இதை விளக்கலாம். பிரிட்டிஷாரின் மொழிபெயர்ப்பு முயற்சிகள் யாவும் கீழ்த்திசை நாடுகள் பற்றிய அவர்களது சித்தாந்தத்தின் (Orientalist ideology) வழியேயும் இந்தியாவைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கும் வகைப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான புதிய ஆட்சியாளர்களின் தேவைக்கேற்ப இந்தியாவைப் பற்றி தங்களுக்கேயுரிய ஒரு படைப்பைச் செய்துகொண்ட நேரத்தில் இந்திய மொழிபெயர்ப்பாளர்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆங்கிலேயரது கோட்பாடுகளை விரிவாக்கியும் திருத்தியும் சிலபோது எதிர்த்தும் அமைந்தன. எனினும், அவர்களின் மோதல்கள் யாவும் புராதான நூல்களைச் சுற்றியே அமைந்திருந்தன. இராஜாராம் மோகன் ராயின் மொழிபெயர்ப்பான சங்கரரின் வேதாந்தம், கெனா, ஈஸவஷ்ய உபநிடதங்கள் முதலியவையே இந்திய அறிஞர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு முதன்முதலில் படைக்கப்பட்ட இந்திய நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளாகும். அதனைத் தொடர்ந்து ஆர்.சி. தத்தின் ரிக்வேதம், உபநிடதங்கள், இராமாயணம், மகாபாரதம், மற்றும் சில மரபார்ந்தப் பண்டைய சமஸ்கிருத நாடகங்களின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. இந்தியர்கள் பணிந்துபோகும் பண்பாளர்கள், கோழைகள் என்ற எண்ணத்தைக் கொண்ட கற்பனையான பயனெறியிலமைந்த கருத்துக்களை எதிர்க்கும்வகையில் இம்மொழிபெயர்ப்புகள் விளங்கின. அதன்பிறகு தீனபந்து மித்ரா, அரவிந்தர், இரவீந்தரநாத் தாகூர் போன்றவர்களின் பல மொழிபெயர்ப்புகள் வெள்ளமென வெளிவரத்துவங்கின. இக்காலகட்டத்தில், இந்திய மொழிகளுக்கு இடையேயும் மொழிபெயர்ப்புகள் நடைபெற தொடங்கினாலும் அவை மிகக் குறைந்த அளவிலேயே அமைந்தன.
இந்தியாவில் தற்போதும் பெரும்பான்மையான கல்வியறிவுடையவர்களுக்குக் கூட ஆங்கில நூல்கள் எளிதில் நெருங்க முடியாத நிலையிலேயே இருந்துவருகிறது என்பதே உண்மையான நிலவரமாகும். இப்பிரிவினர் அறிவாழுமை பெறுவதென்பது ஆங்கில மொழியின் மதிப்புறு இலக்கியங்கள் மற்றும் அறிவுசார் நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதன் வாயிலாகவே சாத்தியமாகும். மொழிபெயர்ப்புப் பற்றி காந்தி அடிகளின் கருத்தை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக அமையும்: “பன்னாட்டு வியாபார வணிகத்தொடர்புக்கான ஒரு மொழியாக நான் ஆங்கிலத்தைக் கருதுகிறேன். அதனால் ஒரு சிலர் அதைக் கற்றுக்கொள்வது அவசியமாகிறது…. அவர்கள் ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ச்சியடைவதோடு ஆங்கிலத்திலுள்ள தலைசிறந்தப் படைப்புக்களை நம் தாய்மொழிகளில் மொழிமாற்றம் செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்”. கல்வி நிலையங்களில் ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொள்வதென்பது இந்திய மொழிகளின் வளர்ச்சிக்குத் தடையாக அமையும் என்றுகூட அவர் கருதினார்.
எல்.எம். கூப்சந்தானி அவர்கள் சுட்டிக்காட்டுவது போல், காலனி ஆட்சிக்குமுன் இந்தியாவில் பாடசாலைகள் மற்றும் மக்தாப்கள் மூலம் அமைந்த கல்வி அமைப்புகள் நடைமுறையில் இருந்தன. அவை பள்ளிக்கல்வியை ஆரம்பநிலை சமூகவயமாக்கம் என்றும் வட்டார வழக்கிலிருந்து உயர்நடை வழக்குவரையிலான பேச்சுவகைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய மொழித்திறனை வளர்க்கும் ஒரு படி நிலையாக கருதியது. செயற்பாட்டுத் தன்மையுள்ள பல்வேறு கீழ்த்திசை மொழிகள் மற்றும் எழுத்துக்கள் கற்பவரிடம் வளமான மொழிக்களஞ்சியத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் பாரம்பரியமாக இருந்து வந்த பன்மொழித் தன்மையைப் பொறுத்துக்கொள்ள இயலாத காலனி ஆட்சியாளர்கள் இந்தியக் கல்வியில் ஒருமொழித் தன்மையை உருவாக்கி ஆங்கிலத்திற்கும் இந்திய மொழிகளுக்குமிடையே வேறுபாடு ஒன்றை ஏற்படும்விதமான தீர்வைச் செயல்படுத்தினர். மெக்காலேயின் ‘இந்தியக் கல்விக்கொள்கை’ (1835) என்ற நூலும் அவருக்கு முன்பிருந்தவர்களின் செயல்களும் இந்திய மொழிகளைப் புறக்கணித்தன. காலனி ஆட்சிக்குப் பிற்பட்ட காலக்கட்டத்தில் தாய்மொழிகளை ஒரு ஊடகமாகக்கொண்டு பயிற்றுவிக்கும் நிலை அதிகரித்தது. உளவியல், சமூகவியல், கல்வியியல் அடிப்படையில், ஒரு குழந்தை தன் தாய்மொழி வாயிலாகத்தான் நன்றாகவும் வேகமாகவும் கற்றுக்கொள்கின்றது என்ற ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் (UNESCO) ஆணையானது பல்வேறு மொழித் திட்டமிடுவோரால் மேற்கோளாகக் காட்டப்படுகிறது.
எனவே, நம் சமூகத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு மொழிகளுக்குச் சமூகத்திலும் பள்ளிகளிலும் நாம் இடமளிக்கவேண்டியது அவசியமாகும். இலக்கியம் மற்றும் அறிவுசார் நூல்களின் மொழிபெயர்ப்புகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெருமளவில் கிடைக்கும்போதுதான் இவை சாத்தியமாகும். இந்த அறிவுசார் நூல்களை ஒரு இந்திய மொழியில் இருந்து மற்றொரு இந்திய மொழிக்கு ‘கிடைநிலை மொழிபெயர்ப்புகள்’ என்ற அடிப்படையில் மொழிபெயர்ப்புகள் அமையவேண்டுமே தவிர மேற்கத்திய ‘கடன்வழங்கும்’ மொழிகளிலிருந்து ‘செங்குத்து நிலை’யில் மொழிபெயர்ப்புகள் பெறுதல் என்ற வகையில் இருக்கக்கூடாது (சிங் 1990).
இந்தியாவில், தங்கள் தாய்மொழி வழியாக உயர்தரமான அறிவினைப் பெறவிரும்பும் பொதுமக்களுக்கு இந்த அறிவுசார் நூல்கள் கிடைக்கவேண்டும் என்பது எங்களின் திடமான நம்பிக்கையாகும். இந்த ஆதாரக் கருத்தின் அடிப்படையில் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (NTM) உதித்து இருக்கிறது.