தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம்(NTM) என்ற எண்ணத்தின் மூலமானது முதன்முதலில் இந்திய பிரதமர் அவர்களிடமிருந்து தோன்றியது ஆகும்.

தேசிய அறிவுசார் ஆணையத்தின் (NKC) முதல் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் அவர்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் முக்கிய துறைகளில் அறிவுபெருக்கத்திற்கு உயிராதாரமாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் கல்வியிலும் தொடர் கற்றலிலும் பொதுமக்களின் பங்கேற்பை வலுப்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவதன் முக்கயத்துவத்தையும் குறிப்பிட்டார்.பிரதமர் அவர்களின் கருத்தை ஏற்றுகொண்ட இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த திரு சாம் பிட்ரோடா இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்வகையில் மொழிபெயர்ப்புக் கலையை மேம்படுத்துவதற்கான ஒரு தனி நிறுவனமோ, திட்டமோ உடனடியாக தேவைப்படுகின்றது என்று எண்ணினார்.
இந்தியாவில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு என்பது உண்மைதான் என்றாலும் நமது நாட்டின் சமச்சீர் அற்ற மொழிபெயர்ப்பு செயல்பாடுகளால் பொதுமக்களின் பயனுள்ள பங்கேற்பு அவசியம் தேவைப்படுகிறது. சமச்சீர் அற்ற மொழிபெயர்ப்பு என்பது பல மொழிகள், பலப் பாடப்பிரிவுகள் இவைகளைப் சார்ந்தும் மற்றும் மொழிபெயர்ப்பின் தரம், விநியோகம், அணுகுமுறை ஆகியவற்றினைச் சார்ந்தும் அமையும். மொழிபெயர்ப்புத் தொடர்பான இந்நடவடிக்கைகள், வேலையில்லாதப் படித்தவர்களுக்கு நேரடியான அல்லது மறைமுகமான வருவாயை ஏற்படுத்தித் தரக்கூடிய பணியாக மட்டுமல்லாமல் பொதுமக்களுக்குச் சேவையாற்றவும் ஊக்கமளிக்கின்றன.
இந்த விழிப்புணர்ச்சியே மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக, நூல் வெளியீடுகள், பிரசுரங்கள் போன்ற மொழிபெயர்ப்புத் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு செயலாண்மைக் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களை ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்த பணியமைப்பு ஒன்றைப் பேராசிரியர் ஜெயதி கோஷ் அவர்களின் தலைமையில் ஏற்படுத்தவேண்டும் என்ற நிலையைத் தேசிய அறிவுசார் ஆணையத்திற்கு ஏற்படுத்தியது. இந்தியாவில் மொழிபெயர்ப்புத் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள சம்மந்தப்பட்ட அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், கல்வியாளர்கள், மொழியியல் அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்போடு தொடர்புடையவர்களின் பிரதிநிதிகள் முதலானோர் இப்பணியமைப்பில் இடம்பெற்றுள்ளனர். இக்குழு 2006 பிப்ரவரியில் தில்லியில் கூடியபோது இத்துறையின் களங்கள் பற்றிய விரிவான உருவரையானது மைசூர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் உதய நாராயண சிங் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
06.03.2006 அன்று தேசிய மொழிபெயப்புத் திட்ட உறுப்பினர்-செயலரான பேராசிரியர் ஜெயதி கோஷ் அவர்கள் தேசிய அறிவுசார் ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் திருத்திய முன்மொழிவினைத் திட்டக்குழுவின் துணைத் தலைவருக்கு மேலனுப்பினார். அதன்பிறகு, அக்குழுக்கள் பலமுறைக் கூடியது. இதற்கிடையில் வளரும் சமூகங்களுக்கான கல்வி மையம் (CSDS), வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய ஆலோசனை சபை (ICHR), போன்ற நிறுவனங்களைச் சார்ந்த சமூகவியல் அறிஞர்களிடமிருந்து சில விரிவான கருத்துரைகள் பெறப்பட்டன. அவை தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் நோக்கம் மற்றும் கட்டமைப்புப் பற்றிய பல்வேறு செயல்முடிவுகளைக் குறித்த சந்தேகங்களும் மற்றும் அவற்றிற்குரிய பயனுள்ள கருத்துக்கள், புதிய ஆலோசனைகள் போன்றவைகளாகும். அவற்றில் ஒரு சில தற்போது தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 01.09.2006 இல் தேசிய அறிவுசார் ஆணையத்தின் தலைவரான திரு சாம் பிட்ரோடா அவர்கள் இத்திட்டத்தைப் பற்றிய விவரங்களைப் பிரதமருக்கு அனுப்பினார். அதன் பிறகு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் விரிவான திட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டது.