|
|
 |
 |
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் அறிவுசார் நூல்களை மொழிபெயர்ப்பது என்ற முக்கியமான நோக்கத்துடன் பின்வரும் அடிப்படை இலக்குகளை நிறைவேற்றும்:
-
பல்வேறு துறைகளில் இருந்து வேறுபட்ட செயல்திறன் மற்றும் கல்வித்தகுதிப் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கான தரவுக் களஞ்சியம் ஒன்றை உருவாக்குதல். இக்களஞ்சியமானது குறிப்பிட்ட பணிகளுக்காக இணையத்திலும் மற்றும் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தினையும் தொடர்பு கொண்டு பெறும்வகையில் அமைக்கப்படும்.
- தரவுக் களஞ்சியங்கள் மற்றும் ஏற்கெனவே காணப்பெறும் பல்வேறு வகை மொழிபெயர்ப்புகளின் விவரம், பாடங்களின் அடிப்படையில் பட்டியல்களாகப் புதுப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்களுக்கும் நூலக வலையமைப்புகளுக்கும் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படும்.
- மொழிபெயர்ப்பாளர்களுக்கான குறுகிய காலப் பயிற்சிவகுப்புகள் நடத்துதல்.
- தரம்வாய்ந்த மொழிபெயர்ப்புக் கருவிகளை அனைவரும் அறியும்வகையில் பிரபலப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல்.
- எந்திர மொழிபெயர்ப்பை ஊக்குவித்தல்.
மேற்கண்ட நோக்கங்களை அடைய இத்திட்டம் முக்கியமான பணிகள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் பல உட்கூறுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. இப் பணிகள் மற்றும் நிகழ்வுகள் :
இந்திய அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ள தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சொல்லாக்கத்திற்குத் தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையத்திற்கு வழங்குதல்.
மின்னணு அகராதிகள், பொருளியைபுச் சொற்களஞ்சியங்கள் போன்றவற்றைத் தாமே உருவாக்குதல் அல்லது பணிகளை வெளித்திறன் அடிப்படையில் பெறுதல்.
நமது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் முக்கியமான துறைகளில் உள்ள அறிவுசார் நூல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிடுதல் வேண்டும். இத்திட்டம், 11 வது திட்டக்காலத்தில், 65 முதல் 70 வேறுபட்ட பிரிவுகளில் (தொடக்கத்தில் 42 பிரிவுகள்) உள்ள 1760 அறிவுசார் நூல்கள் மற்றும் 200 பாடநூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தைச் செயலாக்கத் துவங்கினால் மொழிபெயர்ப்புகள் மற்றும் பதிப்புக்களின் எண்ணிக்கை அடுத்துவரும் திட்டக்காலங்களில் மென்மேலும் அதிகரிக்கும் என்றும் ஒவ்வொரு திட்டக்காலத்திற்கான நன்னம்பிக்கை மதிப்பீடு சுமார் 8800க்கும் மேற்பட்ட நூல்கள் மொழிபெயர்க்கவேண்டும் என்பதாகும்.
மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்புத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பகுப்பாய்வுகள் போன்றவற்றை வெளியிடும் இதழ்களுக்கு மானியங்களை வழங்குதல்.
நூலாசிரியர்கள்/ மொழிபெயர்ப்பாளர்கள் முதலானோருக்கு அறிவுசார் சொத்து /பதிப்புரிமைக் கட்டணங்கள் வழங்க நிதியுதவிகளை அளித்தல்.
பல்வேறு நிலைகளில் மொழிபெயர்ப்பு பயிற்சிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் போன்றவற்றிற்குத் தேவையான நிதியுதவிகளை வழங்குதல்.
இயற்கை மொழியாய்வுச் செயலாக்கம், அல்லது NLP தொடர்பான ஆய்வுகளுக்குத் தேவையான நிதியுதவிகளை வழங்குதல்.
பல்கலைக்கழகங்களில் உள்ள துறைகளுக்கு மொழிபெயர்ப்பில் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புகளை நடத்துவதற்காக (மொழிபெயர்ப்பு கையேடுகள் தயாரித்தல் போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக) நிதியுதவிகளை வழங்குதல்.
|
|