 |
அறிவுசார் நூல்களின் மொழிபெயர்ப்பு என்பது தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் முதன்மையான நடவடிக்கையாகும். இதனுடன், மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயிற்சி, செய்திகளைப் பரப்புதல், கலைச்சொற்களை உருவாக்குதல் போன்ற பணிகளும் இத்திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருக்கும். அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையம் (CSTT), தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(NCERT), நேஷனல் புக் ட்ரஸ்ட் (NBT), பல்கலைக்கழக மானியக் குழு (UGC), சாகித்திய அகாதமி, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்(CIIL), மைசூர், கிரந்த அகாதமிகள், பொது நூலகங்களின் வலையமைப்புகள் போன்ற பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பானது இப்பணிகளுக்குத் தேவைப்படுகின்றது. இவை, உடன்நிகழ் மற்றும் இரட்டிப்பான மொழிபெயர்ப்பு வேலைகளைத் தடுக்க உதவிபுரியும்.
இதேபோன்று பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமல்லாமல் நூல்வெளியீட்டாளர்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், நூல் விற்பனையாளர்கள் போன்றவர்களைத் தொடர்புபடுத்திப் பணியாற்ற தேவையான சாத்தியக்கூறுகளும் உருவாக்கப்படும்.
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் பகுதியாக உள்ள முயற்சிகள் பின்வருமாறு:
A. தொழில்நுட்பம், அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்கம்
தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கலைச்சொற்களைச் செந்தரப்படுத்துதல் மற்றும் மொழிபெயர்த்தல் என்பது அறிவுசார் நூல்களை மொழிபெயர்ப்பதற்கான முதன்மைத் தேவைகளாகும். மேலும் தரமற்ற வார்த்தைகள், கொச்சை வழக்குகளுக்கு இடமளிக்காமல் தவிர்த்தல் மற்றும் பொதுக்கருத்தை உருவாக்குதல் என்பதும் அவசியமாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையத்தின் முயற்சிகளை வலுபடுத்தும்வகையில், பட்டியலிடப்பட்டுள்ள 22 இந்திய மொழிகளிலும் புதிதாகச் கலைச்சொற்களை உருவாக்கி அறிவுசார் நூல்களை விரைந்து மொழிபெயர்க்கத் தேவையான உதவிகளைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் மேற்கொள்ளும். உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (C-DAC) உடன் இணைந்து 22 மொழிகளிலும் உருவாக்கப்பட்ட கலைச்சொற்களை இணையத்தில் பயன்படுத்தத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் பாடுபடும்.
|
B. மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயிற்சி
மொழிபெயர்ப்பு என்பது ஒரு தனித்துறை நடவடிக்கை. அறிவுசார் நூல்களை மொழிபெயர்ப்பதற்கு அந்த துறைகளில் உயர்தர தனித்துறைப் பயிற்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் பின்வரும் வகையில் அவர்களுக்குரிய பயிற்சியளிக்கும்:
1. பொருள் விளக்கமளித்தல், உட்தலைப்பிடல் போன்ற வரையறுத்துக் குறிக்கப்பட்ட பணிகளுக்காகவும் சட்டம், அறிவியல், பயன்பாட்டு அறிவியல், சமூக அறிவியல் முதலான துறைகளின் மொழிபெயர்ப்புகளை மேற்கொள்ளவும் அந்தந்த துறைகளில் புலமை வாய்ந்த கல்வியாளர்கள்/ வல்லுநர்களின் உதவியைக் கொண்டு குறுகிய காலப் பயிற்சித் திட்டங்களை நடத்துதல்;
2. மொழிபெயர்ப்பாளர்களுக்கான பாடப் பிரிவுத் தொகுப்புகள் பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குதல் மற்றும் அதனை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பயிற்றுவிக்கப்படும் மொழிப் பயிற்சித் திட்டங்களில் பாடப்பொருளாக்குதல் அல்லது தனியாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு விடுமுறைக் காலச் சிறப்பு படிப்புகள், வேலை/வகுப்பு நேரத்திற்குப் பின் பயிற்சிகளை நடத்துதல்;
3. மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொடர்புடைய துறைகளில் சிறப்புப் பாடத்திட்டங்களை உருவாக்க தேவையான உதவிகளைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்கி ஊக்குவித்தல்;
4. மாணவர்களின் ஆராய்ச்சி உள்ளிட்ட ஆய்வுத் திட்டங்களுக்கு ஆதரவளித்தல். குறிப்பாக, முன்மாதிரியாக கண்டறியப்பட்டுள்ள நூல்களின் சிறந்த மொழிபெயர்ப்புகளை உருவாக்குதல்;
5. இந்திய மொழிகளுக்கு இடையே மொழிபெயர்ப்பினை மேற்கொள்வதை வலுப்படுத்துவதற்கும் கல்வி நிறுவனங்களிடையே மாணவர்களின் பரிமாற்றத்திற்கு உதவிசெய்யும் வகையிலும் அமைந்த ஆய்வு உதவித்தொகைகளை வழங்குதல்;
6. அறிவுசார் நூல்களின் மையக்கருத்து, சொற்றொகுதிகள், கலாச்சார மற்றும் மொழியியல் சூழல் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களைக் களைவதற்காக வல்லுநர்கள், பயிற்சியர்கள் முதலானோர் ஒன்றுகூடி கலந்தாலோசித்து தீர்வு காண்கின்ற வகையிலமைந்தப் பயிலரங்குகளை ஏற்பாடு செய்தல்;
7. மொழிபெயர்ப்புகளைப் பதிப்பித்தலுக்கு உகந்தவாறு மாற்றியமைக்கத் தேவைப்படும் கூர்ந்தாய்தல், பதிப்பித்தல் மற்றும் திருத்தி அமைத்தல் போன்ற பணிகளுக்கான பயிலரங்குகளை நடத்துதல்.
|
C. தகவல்களைப் பரப்புதல்
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மூலம் கீழ்க்கண்ட வழிகளில் மொழிபெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப்புகள் பற்றிய தகவல்கள் பரப்பப்படும்:
1. பல்வேறுப் பிரிவுகளில் பலவகைப்பட்ட திறன்களும் தகுதிகளும் படைத்த மொழிபெயர்ப்பாளர்களுக்கான தரவுக்களஞ்சியம் ஒன்றை உருவாக்குதல்;
2. இந்திய மொழிகளில் இதுவரை வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகள், ஆங்கிலம் மற்றும் பிற அயல்நாட்டு மொழிகளில் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்திய நூல்கள் போன்றவற்றினைப் பாடப்பிரிவுகள், மொழிகள் என்ற அடிப்படையிலும் மற்றும் பயனாளிகளின் தேவைக்கேற்ற வகையிலும் உள்ளீடு செய்து தேடும் வசதியுடனும் கூடிய உடன் நிகழ் நூல்விளக்க அட்டவணை ஒன்றை உருவாக்குதல்.
|
D. விழிமை மற்றும் தகைமை நிலை
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளைப் பிரபலப்படுத்தும். இம்மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மூலம் மொழிபெயர்ப்பானது சிறந்த ஊதியம் அளிக்கும் துறையாக மாற வாய்ப்புள்ளது. பல்வேறு துறையைச் சார்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் தேசிய மொழிபெயர்ப்பாளர்களுக்கான அட்டவணையில் பட்டியலிடப்படுவர். மொழிபெயர்ப்பின் தரத்தை நிர்ணயித்தல் மற்றும் இத்திட்டத்தில் பதியக்கூடிய அளவிற்குத் மொழிபெயர்ப்பாளர் தகுதியானவரா என்பதைக் கண்டறிந்து அவரைத் தேசியத் தொகுப்பில் சேர்ப்பது முதலான பணிகளைத் தொடர்புடைய துறையைச் சார்ந்த வல்லுநர்கள், மூல/ இலக்கு மொழிகளைச் சார்ந்த கல்வியாளர்கள், அறிவார்ந்த வாசகர்கள் போன்றோரை உறுப்பினர்களாகக் கொண்ட மதிப்பீட்டுக் குழுக்கள் மேற்கொள்ளும்.
|
E. மொழிபெயர்ப்பினை அணுகுதல் மற்றும் பரவுதலை உறுதிசெய்தல்
மொழிபெயர்ப்பினை மேம்படுத்த மற்றும் அனைவரும் அறியும்வகையில் புலப்படுத்த மேற்கொள்ளப்படவேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு:
1. மொழிபெயர்ப்பு நூல்களுக்கான திருவிழாக்களை நடத்துதல்;
2. மொழிபெயர்ப்பிற்கான பரிசுகளும் ஆய்வு உதவித்தொகைகளும் வழங்குதல்;
3. வாசிப்புகள், கலந்துரையாடல்கள், நூல் கண்காட்சிகள், மொழிபெயர்ப்பாளர்களைப் பாராட்டிச் சிறப்பித்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் கூடிய மண்டல மொழிபெயர்ப்புத் திருவிழாக்களை நடத்துதல்;
4. தரமான மொழிபெயர்ப்புகளின் தொடக்கநிலை விற்பனைக்கு உதவும்வகையில் நூலகங்களின் வலையமைப்புகளுடன் இணைப்பை ஏற்படுத்துதல்;
5. வெளியீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோருடன் மறுகொள்முதல் ஏற்பாடுகளைச் செய்தல்;
6. மொழிபெயர்ப்புகள் தொடர்பான செயல்களை ஆதரிக்கும்வகையில் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் நூல் வெளியீட்டு நிறுவனங்களுக்குத் தேவையான மானியங்களை வழங்குதல்;
7. தரவு இறக்கம்செய்யப் பெயரடையாளத் தொகை ஒன்றை நூல் வெளியீட்டாளர்களுக்கு அளித்து, மொழிபெயர்க்கப்பட்ட பயிற்றுவிப்பு நூல்களைத் தரவு இறக்கம் செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துதல்;
8. மொழிபெயர்ப்பாளர்கள், பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத் துறைகள், நூல்வெளியீட்டாளர்கள், பொதுத்துறை/ தனியார் துறை நிறுவனங்கள் போன்றவைகளுக்கு இடையே ஒரு இடைமுகமாக விளங்குதல்;
9. தொடக்கத்தில் ஆங்கில மொழியில் இருந்து பல்வேறு துறைகள் தொடர்பான இதழ்களை மண்டல மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்து வெளியிடுவதற்கு நிதியுதவிகளை வழங்குதல்;
10. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டத்தில் மொழிபெயர்ப்பைச் சேர்தற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்;
11. அனைத்து நிலைகளிலும் மொழிபெயர்ப்புகளைக் கையாளும் வகையில் அமைந்த மொழி வள மையங்கள் மற்றும் நூல் மூலைகள் போன்றவற்றை அமைக்கக் கல்விநிலையங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல்;
12. தேர்வுகள் மற்றும் வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளில் இருமொழி/ பன்மொழிப் புலமையின் பயன்பாடு மற்றும் தேவையை வழியுறுத்தி முன்னிலைப்படுத்துதல்;
13. சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெருமளவிலான மொழிபெயர்ப்புச் சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் பொதுத்துறை மற்றும் குடிமுறைக் கூட்டறவு நிறவனங்களுடன் தேவையான இணைப்பை ஏற்படுத்துல்.
|
| |
|