National Translation Mission
ciil

Click here for CIIL Profile
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் - விரிவான திட்ட அறிக்கை
  DPR Contents
 
எதிர்நோக்கும் சவால்கள்
அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையம் (CSTT), தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(NCERT), நேஷனல் புக் ட்ரஸ்ட் (NBT), பல்கலைக்கழக மானியக் குழு(UGC), சாகித்திய அகாதமி, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்(CIIL), மைசூர், கிரந்த அகாடமி, பொது நூலகங்களின் வலையமைப்புகள் (Public Library Networks) போன்ற பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பானது மொழிபெயர்ப்புப்பணிகளில் நிகர்ஒத்த, இரட்டித்தல் வேலைகளைத்தடுக்கத் தேவைப்படுகின்றது. இதேபோன்று நூல்வெளியீட்டாளர்கள், ஊடகங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் (Corporate Houses), நூல் விற்பனையாளர்கள் ஆகியோரின் இணைப்பும் அவசியமாகின்றது. பொதுத்துறை மற்றும் தனியார்த் துறை நிறுவனங்களுக்கிடையே கையாளவேண்டிய உத்தியினை நிர்ணயித்தல் மற்றும் ஒன்றுபடுவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் என்பன இதில் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தில் எதிர்நோக்கும் பெரும் சிக்கல்கள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன

A. தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்கம்
  இந்தியாவில் தற்போது பன்மொழிச் சூழல் நிலவிவருவதால் ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு எளிதில் மொழிபெயர்க்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்நடவடிக்கைகளில், சம்பந்தப்பட்ட மொழிகளின் படிநிலை அமைப்புகள் (hierarchies) மாறுபடாதவகையில் மொழிபெயர்ப்பினை எளிதில் மேற்கொள்ளும் வழிவகைகளை நாம் உருவாக்கவேண்டும்.

மொழிகளுக்கு இடையே எளிதாக மொழிபெயர்ப்பை மேற்கொள்ள, அறிவுசார் நூல்களில் உள்ள சொற்களின் மொழிபெயர்ப்பைத் தரப்படுத்துதல், தரமற்ற வார்த்தைகள் மற்றும் கொச்சை வழக்குகளைப் (slang words) பயன்படுத்துவதைத் தவிர்த்தல், மற்றும் பொதுக்கருத்தை உருவாக்குதல் என்பது அடிப்படைத் தேவையாகும். இதுவே தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலாகும்.

B. மொழிபெயர்ப்பாளர் கல்வி
  குறிப்பிட்ட பிரிவுகளில் நூல்களை மொழிபெயர்த்தல் என்ற கேள்வி எழும்போது மொழிபெயர்ப்பு என்பது ஒரு தனித்துறை நடவடிக்கையாக இருப்பதால் இதற்குத் தனித்துறைப் பயிற்சி அத்தியாவசியமாகின்றது. மொழிபெயர்ப்பாளர்களுக்கான கல்வி வழங்கத் தேவையான நடவடிக்கைகளைத் திட்டம் மேற்கொள்ள உள்ளது

1. சட்டம், அறிவியல், பயன்பாட்டு அறிவியல், சமூக அறிவியல் முதலான துறைகளில் பொருள்விளக்கமளித்தல்(interpretation), உட்தலைப்பிடல் (subtitling) போன்றவற்றை வரையறுத்துக் குறிக்கப்பட்ட பணிகளுக்காக cஅனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள்/ வல்லுநர்களைக் கொண்டு குறுகிய காலப் பயிற்சித் திட்டங்கள் நடத்துதல்;
2. பாடப் பிரிவுத் தகவமைப்புகள் (course modules) மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயன்பாட்டுத் தொகுப்புகளை (pacages for translators) நாட்டில் பயிற்றுவிக்கப்படும் மொழிப் பயிற்சித் திட்டங்கள், விடுமுறைக் காலங்களில் நடத்தப்படும் சிறப்பு படிப்புகள், வேலை/வகுப்பு நேரத்திற்குப் பின் நடத்தப்படும் மாலைநேரப் படிப்புகள் போன்றவற்றில் ஒருங்கிணைத்தல்;
3. பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொடர்புடைய துறைகளில் சிறப்புப் பாடத்திட்டங்கள் உருவாக்கத் தேவையான உதவிகளை வழங்குதல், ஆதரித்தல் மற்றும் ஊக்குவித்தல்;
4. மாணவர்கள் ஆராய்ச்சிக்கு தேவைப்படும் முன்மாதிரி நூல்கள், ஆசிரியர்கள் பயிற்றுவிக்க பயன்படுத்தும் நோக்கத்திற்கு (Pedagogic purpose) உதவிசெய்யும் நூல்களாகக் கண்டறியப்பட்டுள்ள சிறந்த மொழிபெயர்ப்புகளைச் சேகரித்தல் மற்றும் ஆய்வுத் திட்டங்களுக்கு உதவிசெய்தல்;
5. இந்திய மொழிகளுக்கு இடையே மொழிபெயர்ப்பினை மேற்கொள்வதை வலுப்படுத்துவதாகவும் மாணவர்கள் பரிமாற்றத்திற்கு உதவிசெய்யும் வகையிலும் அமைந்த ஆய்வு உதவித்தொகைகள் வழங்குதல்;
6. அறிவுசார் நூல்களின் மையக்கருத்து, சொற்றொகுதிகள், கலாச்சார மற்றும் மொழியியல் சூழல் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களைக் களைவதற்கானச் சிறப்பு நூல்களை முன்மாதிரிகளாகக் கொண்டு வல்லுநர்கள், பயிற்சியர்கள் முதலானோர் ஒன்றுகூடி கலந்தாலோசித்து முடிவு காண்கின்ற பயிலரங்குகளை நடத்துதல்;
7. மொழிபெயர்ப்புகளைப் பதிப்பித்தலுக்கு உகந்தவாறு மாற்றுவதற்குத் தேவைப்படும் கூர்ந்தாய்தல் (vetting), தொகுப்பித்தல் (editing) மற்றும் திருத்தி அமைத்தல்(copy-editing) போன்ற பணிகளுக்கான பயிலரங்குகளை நடத்துதல்.

C. செய்திகளைப் பிரபலப்படுத்துதல்
  இந்நாட்டில் மொழிபெயர்ப்பின் செயல்வல்லமைப் பற்றிய அறிவானது போதுமானதாக இல்லை. மொழிபெயர்ப்புத் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் ஒரே மூலாதாரத்தில்/ இடத்தில் கிடைப்பதில்லை. ஆங்கிலத்தைத் தவிர்த்த பிற மொழிபெயர்ப்பாளர்களுக்கு இந்நிலை உள்ளது என்பது மறுக்க முடியாதது தான். இங்கு ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கிடைக்கும் வசதிகள் பிற மொழி மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கிடைப்பதில்லை.

இத்திட்டமானது, மொழிபெயர்ப்பு நூல்களை அணுகுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் களைவதற்கு மற்றும் ஏற்கெனவே உள்ள திறமைகளை அடையாளம் காண்பதற்குப் பின்வரும் வழிமுறைகளைக் கையாள உத்தேசித்துள்ளது:

1. பல்வேறுப் பிரிவுகளில்/துறைகளில் பலவகைப்பட்ட திறன்கள் மற்றும் தகுதிகளைப் படைத்த மொழிபெயர்ப்பாளர்களுக்கான தரவுக்களஞ்சியம் (data respository of translators) ஒன்றை உருவாக்குதல்;
2. இந்திய மொழிகளில் இதுவரை வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகள், ஆங்கிலம் மற்றும் பிற அயல்நாட்டு மொழிகளில் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்திய நூல்கள் போன்றவற்றினைப் பாடப்பிரிவுகள், மொழிகள் என்ற அடிப்படையிலும் மற்றும் பயனாளிகளின் தேவைக்கேற்ற வகையில் உள்ளீடு செய்து தேடும் வசதியுடனும் கூடிய இணையவழி நூல் விளக்க அட்டவணை (on line bibliography)ஒன்றை உருவாக்குதல்.
  இவற்றினைத் தொடர்ந்து புதுப்பிக்கும்வகையில் பல்கலைக்கழகங்கள், நூல் வெளியீட்டாளர்கள், தேசிய நூலகங்கள், அகாதமிக்கள், நேஷனல் புக் ட்ரஸ்ட், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையம் (CSTT) போன்ற நிறுவனங்களோடு தேவையான இணைப்பு ஏற்படுத்துதல்.

  சாகித்திய அகாதமியானது, இலக்கிய மொழிபெயர்ப்புகளின் நூல் விளக்க அட்டவணை ஒன்றினை (bibliography of translators in literature) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் அனுகிருதி இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. சாகித்திய அகாதமி, இந்திய மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்பாளர்களை அட்டவணைப்படுத்தி மொழிபெயர்ப்பாளர்களுக்கான பதிவேடு (Translators’ Register) ஒன்றினை வெளியிட்டுள்ளது. தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட இணையத்தளத்தில் இப் பதிவேடு வெளியிடப்படும். இதனைப் புதுப்பித்தலோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் புதிதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளிலும் விரிவடைய செய்யத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை, இலக்கியங்களோடு மட்டும் எல்லைப்படுத்தப்படாமல், பிற பிரிவுகளில் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் போன்றவற்றினை அட்டவணைப்படுத்தத் தேவையான முயற்சிகள் புதிதாகத்தொடங்கப்படும். இப்பணிக்குத் தேவையானப் பணியாளர்களான திரட்டாளர் மற்றும் தொகுப்பாளர் முதலியவர்கள் இந்தியாவின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து பணியமர்த்தப்படுவர்.

D. காண்பு நிலை மற்றும் வாழக்கூடிய தன்மை
  மொழிபெயர்ப்புகளும் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களும் அனைவராலும் அறியப்படுகின்ற நிலை ஏற்படவேண்டும். மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய நிலைகளின் மீது புதிதாக கவனம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால், நாம் தற்போது மொழிபெயர்ப்பை ஒரு வாழ்க்கைத் தொழிலாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளோம். இந்தியாவை ஒரு மொழிபெயர்ப்புத் தொழிற்சாலையாக (translation industry) மாற்றவல்ல இத்தொழிலில், மொழிபெயர்ப்பாளர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் மொழிபெயர்ப்பின் மூலம் ஒரு பாங்கான/வளமான வாழ்க்கையைப் பெற்றுத்தரும் சூழலை நாம் உருவாக்கவேண்டும்.

தரநிர்ணயம் மற்றும் அங்கீகாரத்தகுதி வழங்க உதவிசெய்யும் வகையில் பல்வேறுத் துறையைச் சார்ந்த மொழிபெயர்ப்பாளர்களைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ்ப் பதிவுசெய்யவேண்டிய வழிமுறையை உருவாக்கவேண்டியுள்ளது. இப்பணிகளுக்காக, தொடர்புடைய துறையைச் சார்ந்த வல்லுநர்கள், மூல மொழிகள் மற்றும் பெறும் மொழிகளைச் சார்ந்த கல்வியாளர்கள், அறிவார்ந்த வாசகர்கள் முதலானவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மதிப்பீட்டுக் குழுக்கள் உருவாக்கப்படும். இக்குழு, மொழிபெயர்ப்பின் தரத்தை நிர்ணயித்தல், இத்திட்டத்தில் பதியக்கூடிய அளவிற்கு தகுதியான மொழிபெயர்ப்பாளர் விவரம், தகுதியானவர் என்றால் அவரை தேசியத் தொகுப்பில் ஒன்றுசேர்ப்பது முதலானப் பணிகளை மேற்கொள்ளும். மேலும் அவர்களுக்குப் பயன்படும் மதிப்பளித்தல் (accreditation) அல்லது சான்றிதழ்கள் வழங்கப்படும் மற்றும் அவர்களின் பெயர்கள் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.


E. மொழிபெயர்ப்பினை அணுகுதல் மற்றும் பரவுதலை உறுதிசெய்தல்
  மொழிபெயர்ப்புகளை மேம்படுத்த மற்றும் அனைவரும் அறியும்வகையில் பரப்ப/பிரபலப்படுத்த மேற்கொள்ளப்படவேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு:
1. புதிய மொழிபெயர்ப்புகளுக்கான நூல் வெளியீட்டு விழாக்கள் (Book launches) நடத்துதல்;
2. மொழிபெயர்ப்பிற்கானப் பரிசுகளும் ஆய்வு உதவித்தொகைகளும் வழங்குதல்;
3. வாசித்தல், கலந்துரையாடல், நூல் கண்காட்சிகள், மொழிபெயர்ப்பாளர்களைப் பாராட்டிச் சிறப்பித்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் கூடிய மண்டல மொழிபெயர்ப்புத் திருவிழாக்கள் (Anuvaad Melaa) நடத்துதல்;
4. தரமான மொழிபெயர்ப்புகளின் தொடக்கநிலை விற்பனைக்கு உதவும்வகையில் நூலகங்களின் வலையமைப்புகளுடன் தேவையான இணைப்பு ஏற்படுத்துதல்;
5. விண்ணப்பங்களின் அடிப்படையில், வெளியீட்டாளர்கள், நூலாசிரியர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் முதலியவர்களுக்குத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட நிதிநல்கைப் பிரிவில் நூல்களை வாங்குவதற்கும் விற்பதற்குமான ஏற்பாடுகளைச் செய்தல்;
6. தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட நிதிநல்கைப் பிரிவின் கீழ் (NTM-Grants-in-Aid Scheme) மொழிபெயர்ப்புகள் தொடர்பான முயற்சிகளை ஆதரிக்கும்வகையில் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் நூல் வெளியீட்டு நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்குதல்;
7. திறந்தநிலை மூலத்தை உடைய இணையத்தளம் (nominal fee) ஒன்றை நூல் வெளியிட்டாளர்களுக்கு அளிப்பதை முடிவுசெய்து, பயிற்றுவிப்பு நூல்களைத் தரவு இறக்கம் (download) செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துதல்.
8. மொழிபெயர்ப்பாளர்கள், பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பைத் தனிச்சிறப்புப் பாடமாகப் பயிற்றுவிக்கும் துறைகள், பெரிய அளவில் மொழிபெயர்ப்பை விரும்பி வெளியிடும் நூல்வெளியீட்டாளர்கள், பொதுத்துறை/ தனியார்த்துறை நிறுவனங்கள் மற்றும் முக்கியமாக, மொழிபெயர்ப்பு நூல்களை வாங்கும் நுகர்வோர் முதலானவர்களுக்கு இடைமுகமாக (interface) விளங்குதல்;
9. ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்புகளை விரும்பி வெளியிடும் இதழ்களுக்கு நிதிஉதவிகள் வழங்குதல், அல்லது மொழிபெயர்ப்புகளின் மின் உள்ளடக்கங்களை வெளியிடும் அல்லது அச்சிடும் பணிகளில் ஈடுபட்டுள்ள இதழ்கள், அல்லது தொழில்முறையிலான இதழ்கள், அல்லது ஆங்கிலத்திலிருந்து மண்டல மொழிகளில் வெளிவரும் தொடர் வெளியீடுகள் போன்றவற்றிற்கு நிதியுதவி வழங்குதல்;
10. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்களில் மற்றும் தேசிய/மண்டலப் பாடத்திட்ட வரைச்சட்டத்தில் (National/Regional Curriculum Framework) மொழிபெயர்ப்பைச் சேர்ப்பதற்குரிய ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் அவர்களை இணங்கும்படி செய்தல்;
11. கல்வி நிறுவனங்களில் அனைத்து நிலைகளிலும் மொழிபெயர்ப்புகளைக் கையாளும் மொழி வள மையங்கள்(language resource centres) மற்றும் அமைக்க உதவிசெய்தல்;
12. தேர்வுகள் மற்றும் வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளில் இருமொழி/ பன்மொழிப் புலமைத் தேவைப்படும் இடங்களையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பயன்களையும் முன்னிலைப்படுத்துதல்; and
13. இந்தியாவில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெருமளவிலான மொழிபெயர்ப்புச் சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் பொதுத்துறை மற்றும் சமூக சேவை நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்துல்.
www.ciil.org | www.anukriti.net | www.ciilaudiovideo.net | www.ciil-grammars.org | www.ciil-spokencorpus.net
 
  Central Institute of Indian Languages
Department of Higher Education,Language Bureau, Ministry of Human Resource Development
Government of India
Manasagangothri, Hunsur Road, Mysore 570006
Tel: (0821) 2515820 (Director), Reception/PABX : (0821) 2345000, Fax: (0821) 2515032 (Off)