மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயிற்சி என்பது தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் ஒரு முக்கியமான செயல்பாடாகும். இது பல வழிகளில் திட்டத்தின் குறிக்கோளை அடைய உதவிபுரிகின்றது. முதன்மையாக, திட்டத்தைப் பிரபலப்படுத்துவது இதன் குறிக்கோள் ஆகும். இப்பயிற்சியில் பங்குபெறும் மக்கள் இத்திட்டத்தினைப் பற்றிய செய்திகளைப் பல்வேறு இடங்களிலும் பரப்ப வழிவகைசெய்யும். மேலும், இவை தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் பல்வேறு மொழிகள் மற்றும் துறைகளைச் சார்ந்த மொழிபெயர்ப்புகளில் தரத்தில் ஏற்படும் வேறுபாட்டை குறைக்க உதவிபுரியும். இந்நிகழ்ச்சிகளின் வாயிலாகப் பல்வேறு புதிய மொழிபெயர்ப்பாளர்கள் இனங்காணப்பெறுவர். இத்திட்டமானது மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயிற்சியை வழங்கப் பின்வரும் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.
1. பொருள் விளக்கமளித்தல், உட்தலைப்பிடல் போன்ற பணிகளுக்காகவும் சட்டம், அறிவியல், பயன்பாட்டு அறிவியல், சமூக அறிவியல் முதலான துறைகளின் மொழிபெயர்ப்புகளை மேற்கொள்ளவும் அந்தந்த துறைகளில் புலமை வாய்ந்த கல்வியாளர்கள்/ வல்லுநர்களின் உதவியைக் கொண்டு குறுகிய காலப் பயிற்சித் திட்டங்களை நடத்துதல்;
2. பாடப் பிரிவுத் தொகுப்புகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயன்பாட்டுத் தொகுப்புகளை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பயிற்றுவிக்கப்படும் மொழிப் பயிற்சித் திட்டங்களில் பயன்படுத்துதல் அல்லது விடுமுறைக் காலச் சிறப்பு படிப்புகள், வேலை/வகுப்பு நேரத்திற்குப் பின் பயிற்சிகளை நடத்துதல்;
3. மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொடர்புடைய துறைகளில் சிறப்புப் பாடத்திட்டங்களை உருவாக்கத் தேவையான உதவிகளைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்கி ஊக்குவித்தல்;
4. எடுத்துக்காட்டான சிறந்த நூல்களின் மொழிபெயர்ப்புகளை உருவாக்குதல் தொடர்பான ஆய்வுத் திட்டங்கள் குறிப்பாக மாணவர்களின் ஆய்வுத் திட்டங்களை ஊக்குவித்தல் மற்றும் பயிற்றுவிக்கப் பயன்படக்கூடிய வளங்களை உருவாக்குதல்.
5. இந்திய மொழிகளுக்கு இடையே மொழிபெயர்ப்பு செய்வதை நோக்கமாகக்கொண்டு ஒரு நிறுவனத்தில் இருந்து மற்ற நிறுவனத்திற்குச் சென்று பணிசெய்யும் கல்வியாளர்களுக்கு உதவித்தொகைகள் வழங்குதல்.
6. அறிவுசார் நூல்களின் மையக்கருத்து, சொற்றொகுதிகள், கலாச்சார மற்றும் மொழியியல் சூழல் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களைக் களைவதற்கு குறிப்பிட்ட நூல்களை முன்மாதிரிகளாகக் கொண்டு வல்லுநர்கள், பயிற்சியாளர்கள் ஒன்றுகூடி கலந்தாலோசித்து தீர்வு காண்கின்ற வகையிலமைந்தப் பயிலரங்குகளை ஏற்பாடு செய்தல்;
7. மொழிபெயர்ப்புகளைப் பதிப்பித்தலுக்கு உகந்தவாறு மாற்றியமைக்க தேவைப்படும் கூர்ந்தாய்தல் (vetting), பதிப்பித்தல் மற்றும் திருத்தி அமைத்தல்(copy-editing) போன்ற பணிகளுக்கான பயிலரங்குகளை நடத்துதல்.