|
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது, தனது அனைத்து மொழிபெயர்ப்புகளிலும் போதிய தரத்தைப் பெற பல்வேறு வழிமுறைகளையும் அளவுகோள்களையும் கையாள உள்ளது. தரத்தைச் சரிபார்த்தலும் கடைப்பிடித்தலும் 22 மொழிகள் மற்றும் 69 பிரிவுகளிலும் ஒரே சீராக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளப்படும். தரத்தைச் சரிபார்க்கும்போது மொழிகள் அல்லது பாடப்பிரிவுகளில் உள்ள தனிப்பட்ட பிரச்சனைகளைக் களையத் தேவையான அக்கறை செலுத்தப்படும்.
தொடர்புடைய ஒவ்வொரு மொழியிலும் கலைச்சொற்களை உருவாக்குதல் மற்றும் செந்தரப்படுத்துதல் என்பதே மொழிபெயர்ப்பின் தரத்தை உறுதிசெய்தல் என்பதின் முதன்மையான படியாகும். அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்க ஆணையம் (CSTT), தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(NCERT) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து 22 மொழிகளிலும் அறிவியல் மற்றும் கலைச்சொற்களை உருவாக்கும் வழிமுறையைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் ஆலோசித்துவருகிறது.
உருவாக்கப்படும் பொருளடக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் பொருந்தும் வகையில் அமைந்த படிம அச்சுக்களைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் உருவாக்க உள்ளது. முன்வரையறு நடைத் தாள்கள் (Predefined style sheets) மற்றும் ஆவண வகை வரையறைகள் (Document type definitions) போன்றவைப் பல்வேறு மொழிகள் மற்றும் பாடப்பிரிவுகளில் தலைப்புக்களின் இடங்கள் மற்றும் நடை, துணைத் தலைப்புக்கள், உட்பொருட்கள், உருவங்கள், வரைபடங்கள், ஒலி மற்றும் ஒளி மற்றும் பிற வரைவியல் போன்றவற்றைப் பொருத்து உருவாக்கப்படும்.
அனைத்துப் பக்கங்களையும் ஒரே சீராகப் பேணுவதற்காக, ஒவ்வொரு பிரிவிற்குமான மாதிரி கோப்புக்களை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அச்சு, இணையத்தளப் பொருளடக்க உருவாக்குபவர்கள் போன்றோருக்குத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் வழங்குகிறது. இம்மாதிரி கோப்புக்கள் தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட இணையத்திலிருந்து எளிதில் அணுகும்வகையிலும் உருவாக்கப்படும்.
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டமானது தனது மதிப்பீட்டாளர்களுக்குப் பல்வேறு மொழிபெயர்ப்புகளுக்கு உதவக்கூடிய மதிப்பீட்டு நிரல்களை உருவாக்கிவருகிறது. மொழிபெயர்ப்பு மற்றும் மொழி வல்லுநர்களின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள வல்லுநர்கள் இந்த நிரல்களைத் தயாரித்து வருகின்றனர். பல்வேறு மொழிகள், பிரிவுகளில் மொழிபெயர்க்கப்படும் மொழிபெயர்ப்புக்களின் உள்ளடக்கம் மற்றும் வடிவம் இரண்டிலும் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ள தேவையான கவனம் செலுத்தப்படும். வெளியீட்டிற்கு அனுமதிக்கப்படும் ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் நிரலின் குறைந்தபட்ச தகுதிக்குரிய மதிப்பினைப் பெற்றிருக்க வேண்டும்.
தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இத்திட்டத்தின் வெளியீடுகள், மொழிபெயர்ப்பு மென்பொருட்கள், மின் அகராதிகள் போன்றவற்றின் பயன்களை அனுபவிக்கும் பயனர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. இங்கு ‘பயனர்’ எனப்படுவர் மொழிபெயர்ப்பை வாசிப்பவர்கள் அல்லது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மொழிபெயர்ப்புகளைக் கல்வி கற்பிப்பதற்கும் விழிப்புணர்வு திட்டங்களுக்குப் பயன்படுத்துவோரும் ஆவர். மொழிப்பயன்பாடு, படிக்கும் தன்மை, புரியக்கூடிய தன்மை, வெளியீடுகளின் வடிவம், கட்டுதலின் வகை, பகிர்வு, விலை, அணுகுமுறை போன்றவை தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் வரவேற்கின்றது.
மொழிபெயர்ப்பின் தரத்தைச் சோதிப்பதற்கு வகுப்பறைச் சோதனையைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் பயன்படுத்துகிறது. மொழிபெயர்ப்புக்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவின் ஆசிரியர்கள் மூலமாக வகுப்பறையில் பயன்படுத்தப்படுகின்றன .பிறகு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள் முறையாகப் பதிவுசெய்யப்படுகின்றன. இறுதிப் பதிப்புக்கு முன்னால் மொழிபெயர்ப்பின் பயன்பாட்டை அதிகரிப்பதற்குத் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.
மொழிபெயர்ப்புக்களைத் தொகுப்பதற்குத் தொழில் முறையில் தகுதியான பதிப்பாசிரியர்கள் மற்றும் நகல் பதிப்பாசிரியர்கள் குழ ஒன்றைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் ஈடுபடுத்தும்.இவர்களுக்குத் தொழில்துறைத் தரப்பதிப்பு மென்பொருள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் வழங்கப்படும்.தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட வெளியீடுகளுக்குத் தேவையான நகல் பதிப்பித்தல் மற்றும் பதிப்பித்தல் முறைகளைத் தரநிர்ணயம் செய்வதற்கான உதவிகளை வட்டார மற்றும் தேசியக் கூட்டாண்மை வெளியீட்டு நிறுவனங்களிடமிருந்து பெறும்.
பல்வேறு மொழி மற்றும் பாடப்பிரிவுகளின் வல்லுனர்களைக் கொண்டு மொழிபெயர்ப்பில் எழும் தழுவல் தொடர்பான பிரச்சனைகளைத் தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் விவாதித்து, இத்தழுவல் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தொழில்நுட்பக் கலைச் சொற்கள் உருவாக்கம் மற்றும் தரப்படுத்துதலுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மூல மொழியில் இடம்பெற்று இருக்கக்கூடிய ஒரு சொல் அல்லது கருத்துக்கான நிகரன் இலக்குமொழியில் இல்லை என்றால் புதியக் கலைச்சொல் உருவாக்கம் அல்லது அதனை விவரித்துரைத்தல் என்ற கொள்கையினைத் தேசிய மொழிபெர்ப்புத் திட்டம் கடைப்பிடிக்கிறது.ஒரு மொழித் தழுவலின் பயன்பாடு மற்றும் அறிவுத் தன்மையைச் சோதிப்பதற்கு வகுப்பறைச் சோதனை என்பது ஒரு வழிமுறையாகும்.
|