தோற்றம்

தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் (என்டிஎம்) பற்றிய எண்ணம் முதன்முதலில் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடமிருந்து தோன்றியது என்றே கூறவேண்டும். தேசிய அறிவுசார் ஆணையத்தின் (National Knowledge Commission - NKC) முதல் குழுக் கூட்டத்தில் உரையாற்றும்பொழுது, பல முக்கிய துறைகளில் அறிவைப் பெறுவதற்கும், கல்வியிலும் தொடர் கற்றலிலும் பொதுமக்களின் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் மொழிபெயர்ப்பு நூலகளைக் கிடைக்கச் செய்வது எப்படி ஓர் உயிராதரமான விஷயம் என பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்கள். பிரதமர் அவர்களின் கருத்தைக் குறிப்பிற்கொண்ட திரு. சாம் பிட்ரோடா தலைமையில் செயல்பட்ட ஆணையம், இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்வகையில் மொழிபெயர்ப்புத் துறையை மேம்படுத்துவதற்கான ஒரு தனி நிறுவனமோ, திட்டமோ உடனடியாக தேவைப்படுகின்றது என்ற எண்ணத்தைப் பதிவு செய்தது.

இந்தியாவில் மொழிபெயர்ப்பு காலந்தொட்டு நடந்து கொண்டிருப்பது உண்மைதான் என்றாலும், பல்வேறு பாடத்துறைகளையும் மொழிகளையும் பொருத்தவரையிலும் அல்லது தரம், விநியோகம் மற்றும் பெற்றுக்கொள்ள முடியும் வழிகள் ஆகியவற்றைப் பார்த்தாலும் மொழிபெயர்ப்பு உலகில் மிகவும் சமசீரற்ற ஒரு நிலையே காணப்படுகிறது. இதனால் மொழிபெயர்ப்புத் துறையை மேம்படுத்துவதில் பொதுமக்களின் பயனுள்ள பங்கேற்பு அவசியமாகிறது. மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் ஒரு தொழில்துறையைச் சார்ந்தவைபோல் வளரும் நிலையில் அது வேலையில்லாத படித்தவர்களுக்கு நேரடியான அல்லது மறைமுகமான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி, ஒரு வருமானம் வரும் வாழ்க்கைத்தொழிலைக் கொடுப்பது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்குச் சேவையாற்றவும் ஊக்கமளிக்கக் கூடும்.

மொழிபெயர்ப்பின் வாயிலாக ஓர் அறிவுசார் சமூகத்தை உருவாக்கி மனிதவள மேம்பாட்டிற்கு வழிவகுக்க முடியும் என்ற விழிப்புணர்வு, மொழிபெயர்ப்புக்களை வெளியிடுவோர், பரப்புவோர் மேலும் அதன் முன்னேற்றத்திற்கான ஆக்கமுயற்சிகளில் ஈடுபட்டிருப்போர் என தொடர்புள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை ஒருங்கிணைத்த பணிக்குழு ஒன்றைப் பேராசிரியர் ஜெயதி கோஷ் அவர்களின் தலைமையில் ஏற்படுத்தவேண்டும் என்று தேசிய அறிவுசார் ஆணையத்தை எண்ண வைத்தது. இந்தியாவில் மொழிபெயர்ப்புத் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், கல்வியாளர்கள், மொழியியல் அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள், மற்றவர்கள் ஆகிய அனைவரின் பிரதிநிதிகளும் இப்பணிகுழுவில் இடம்பெற்றனர். 2006 பிப்ரவரியில் இக்குழு தில்லியில் கூடியபோது துறையின் களங்கள் பற்றிய பரந்த உருவரையை மைசூர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் உதய நாராயண சிங் கோடிட்டுக்காட்டினார்.