நூலடைவு வரலாறு

மொழிபெயர்ப்பிற்கான நூலடைவு தரவுத்தளம் தேவை என்ற எண்ணம் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. Anukriti.net என்ற மொழிபெயர்ப்புச் சேவை மற்றும் தகவல் தளம் இந்தியாவின் மூன்று முதன்மையான நிறுவனங்களான இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், சாகித்ய அகாதெமி மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியவற்றால் 2001-ல் தொடங்கப்பட்டது. 20,000 தலைப்புகளை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேடு தரவுத்தளம் அனுகிருதியால் உருவாக்கப்பட்டது. எனினும், இந்தத் தரவுகளுக்கு நம்பகத்தன்மையும் தூய்மையாக்கலும் தேவைப்படுகிறது.

ஜூன் 2008-ல், என்டிஎம் தொடங்கப்பட்டபொழுது அனுகிருதி இதனுடன் இணைக்கப்பட்டது. மொழிபெயர்ப்பு நூலடைவு தரவுத்தளம் உருவாக்கும் பணியை என்டிஎம் தொடர்கிறது. 2011 – ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய முயற்சிகளால் இத்திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. ஒரு செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு பல்வேறு மூலங்களிலிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. தொடர்ச்சியாக தரவுகள் கிடைப்பதை உறுதிசெய்ய பல்வேறு இந்தியப் பல்கலைகழகங்கள், பதிப்பகங்கள், நூலகங்கள், மொழிபெயர்ப்பு முகமைகள், இலக்கியச் சமூகங்கள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றோடு தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டது. சுமார் 70,000 தலைப்புகளில் தகவல்களைச் சேகரித்திருக்கிறோம். அதைத் தூய்மைப்படுத்தி கணினிமயமாக்கப்பட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் 2001 –ஆம் ஆண்டின் மத்தியில், பல ஆண்டுகளாக இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களின் தரவுகளைத் தொகுத்து வருகிற, பாஷா சன்சோதன் கேந்திரா, வடோதரா, குஜராத்தில் பணியாற்றுகிற பேராசிரியர் ஜி.என். தேவி அவர்கள் தன்னுடைய மதிப்புமிக்க சேகரிப்பான 20,000 தலைப்புகளை என்டிஎம்மிற்கு வழங்க இசைந்தார்.

செப்டம்பர் 2011-ல், மொழிபெயர்ப்பு தரவுத்தள நூலடைவுக்காக கிடைக்கின்ற தலைப்புகளை கணினிமயமாக்குவது தொடர்பாக எதிர்காலத் திட்டங்களை விவாதிப்பதிற்காக மைசூரில் என்டிஎம்மால் நடத்தப்பட்ட ஒரு நாள் பணிபட்டறையில் பேராசிரியர் தேவியும் என்டிஎம் குழுவும் சந்தித்து விவாதித்தனர். இந்தப் பணிபட்டறையின் போது, பேராசிரியர் தேவி மொழிபெயர்க்கபட்டுள்ள ஒவ்வொரு தலைப்புக்கும் தனி அடையாள எண் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து அதையே பயன்படுத்துமாறு முன்மொழிந்தார். தரவுத்தளத்தின் தொழில்நுட்ப அம்சங்களில் சில மாற்றங்கள் செய்வதற்காக மற்றுமொரு பணிபட்டறை 2011 நவம்பரில் வடோதராவில் நடத்தப்பட்டது. ′மூல நூல்′ மற்றும் ′மொழிபெயர்ப்பு′ பற்றிய அதிகபட்ச தகவல்களைக் கொடுக்கும் நோக்கத்தில் ஒரு மாதிரிப் பக்கம் வடிவமைக்கப்பட்டது. அந்த பக்கத்தை மேலும் நல்ல முறையில் வடிவமைப்பதற்கான முயற்சியில் என்டிஎம் ஈடுபட்டுள்ளது. தற்சமயம் இந்த இணையதளத்தில் 25 மொழிகளை உள்ளடக்கிய சரிபார்க்கப்பட்ட 20,000 தலைப்புகள் உள்ளன.